Published on 19/12/2018 | Edited on 19/12/2018
நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கிக்கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இது இன்றுவரை நிறைவேறவில்லை. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதை விமர்சிக்கத் தொடங்கின. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே இதுகுறித்து கருத்து தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
15 இலட்சம் ரூபாய் ஒரே தவணையாக வழங்கப்படாது. படிப்படியாக அது வழங்கப்படும். ரிசர்வ் வங்கியிடம் பணம் கேட்டோம், ஆனால் அவர்கள் அதை வழங்கவில்லை மேலும் சில தொழில்நுட்ப காரணங்களாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.