கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. அந்த கூட்டணியில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர். ஆனால் திடீரென்று நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்தும் பீகாரில் இருக்கும் மகா கூட்டணியிலிருந்தும் விலகினார். மேலும், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
அதன் பின் நடந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜக தனித்து 240 இடங்களை மட்டுமே கைப்பற்றிருந்தது. மக்களவையில் 272 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலில், பா.ஜ.க அதற்கும் குறைவான இடங்களை கைப்பற்றி மைனாரிட்டியாக இருந்தது. அந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள், பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்தது. அதன்படி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான கட்சிகளாக இருப்பது, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தான் என்ற சூழல் அமைந்தது.
இந்த நிலையில், பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, 2025-2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு அதிகப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (31-01-25) தொடங்கியது. அதன்படி, 2025-2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதில் அவர், “பீகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிக்கப்படும். பீகாரில் தேசிய உணவு தொழில் நுட்பம் & மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும். பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யப்படும். பாட்னா ஐஐடி உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், அந்த மாநிலத்திற்கு மட்டும் அதிகப்படியாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கென எந்தவித தனி அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.