இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை பிரதமர் மோடி கடந்த 16 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த 16 ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தை சேர்ந்த மஹிபால் சிங் என்பவர், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு இரவு நேரப் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கடுத்த நாள் மூச்சுத் திணறல் மற்றும் இதயத்தில் அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
மஹிபால் சிங்கின் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மொராதாபாத்தின் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) எம்.சி. கார்க் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்,நாங்கள் மரணத்திற்கான காரணங்களை விசாரித்து வருகிறோம். பிரேதப் பரிசோதனை நடத்துவோம். இது தடுப்பூசிக்கு எதிர்வினையாகத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.