Skip to main content

ஜார்க்கண்ட் தேர்தல்; வாக்குப்பதிவு தொடக்கம்!

Published on 13/11/2024 | Edited on 13/11/2024
Voting has begun on Jharkhand Primary Election

ஜார்க்கண்ட் மாநிலத்தில், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மொத்தம் 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில், இன்று (13-11-24) முதற்கட்டமாக 43 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில், 73 பெண்கள் உள்பட மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 

முதற்கட்ட தேர்தலில் 2 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், தற்போது அம்மாநில மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது. அதே போல், பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது. 

அதே போல், நாடு முழுவதும் 34 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (13-11-24) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது . ராஜஸ்தானில் 7 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகளிலும், அசாமில் 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பீகார்-4, கர்நாடகா-3, மத்தியப் பிரதேசம்-2, சிக்கிம்-2 மற்றும் சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மேகலாயாவில் தலா ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில், அந்த இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது பொதுவான விதியாகும். அதன்படி, அவர் வயநாடு தொகுதியில் ஏற்கெனவே வகித்து வந்த எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில் இன்று (13-11-24) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்