விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், படகுகளில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த 40 படகுகள் எரிந்து சாம்பலாகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்குத் தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகமடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் படகுகளுக்கான எரிபொருளாக டீசல், பெட்ரோல் ஆகியவற்றைப் படகுகளில் இருப்பு வைத்திருப்பர். அதே சமயம் மீனவர்கள் கடலில் சமையல் செய்ய மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களை இருப்பு வைத்திருப்பர். இதன் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.