
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் புகைப்படம் உத்திர பிரேதச மாநிலம் கோரக்பூர் இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பூத் ஸ்லிப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பற்றி தேர்தல் அலுவலருக்கு, மாவட்ட நீதிபதியின் மூலம் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பிரபானந்த், "இதற்கு யார் காரணம், என்ன நடந்துள்ளது போன்ற அனைத்து விபரங்களையும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்றார். "இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.
கிடைத்த தகவலின் படி, பூத் அலுவலர் சுனிதா வாக்காளர்சீட்டுகளை மக்களுக்கு தருவதற்காக பிரித்து கொடுத்திருக்கிறார். அப்போதுதான் இந்த விராத் கோலியின் புகைப்படம் கொண்ட பூத் சீட்டை பார்த்து வியந்துள்ளார். சுனிதாவும் இந்த வாக்காளர் சீட்டில் உள்ளதுபோல் ஏதேனும் நபர் உண்மையில் இருக்கிறாரா என்று விசாரித்துள்ளார். கடைசியில் எவரும் அங்கு விராத் கோலி என்ற பெயரில் இல்லை என்பதை கண்டுபிடித்து மாவட்ட நீதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
அந்த பூத் சீட்டில், விராத் கோலி சட்டமன்ற தேர்தலில் கோரக்பூர் பகுதியின் வாக்காளர் என்றும், வாக்காளர் எண் 822, வாக்களிக்க போகும் பூத் சஜன்வா என்னும் ஊரில் இருக்கும் ஒரு ஆரம்ப பள்ளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுபோன்று பல பிரபலங்களின் புகைப்படங்கள் பல ஆவணங்களில் தவறுதலாக இடம்பெறுள்ளன. தமிழகத்தில் ஒரு முறை விநாயகர் உருவமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.