இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படம் மட்டுமே இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பலரும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். நாட்டில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள ரூபாய் நோட்டு விவகாரம் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு விநாயகரை வைத்து பிள்ளையார் சுழி போட்டவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்து கடவுள்களான லட்சுமி, விநாயகர் ஆகியோர் படங்களையும் இந்திய ரூபாய் நோட்டில் அச்சிட்டால் நாடு மேலும் வளர்ச்சி அடையும், ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று மத்திய அரசிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் கண்டனமும் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை அடுத்து இந்திய ரூபாய் நோட்டில் வேறு சில தலைவர்களின் படங்களையும் சேர்த்து அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சியினரும் முன் வைத்துள்ளனர். அதில் சில இணையவாசிகள் ராமர் படத்தை ரூபாய் நோட்டில் வைக்க வேண்டும் என்று ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கு வங்க அரசியல் கட்சிகள் சார்பாக நேதாஜி படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் நாராயணன் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநில எம்எல்ஏவுமான நிதிஷ் ரானே 200 ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி கூறும்போது “சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமைதான் அண்ணல் அம்பேத்கர். அவருடைய படத்தை ஏன் ரூபாய் நோட்டில் அச்சிடக்கூடாது” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் அவரது ட்விட்டர் பதிவின் மூலம் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் படத்தை இந்திய ரூபாய் நோட்டில் அச்சடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அது மட்டுமல்லாது சாவர்க்கர் படத்தையும் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.