மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
அந்தவகையில் குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி தேசத்திற்காக ஓய்வில்லாமல் உழைப்பதற்காக திருமணமே செய்துக் கொள்ளவில்லை" என கூறினார். ஆனால் மோடியோ வாரணாசி தொகுதியில் பிரமாண பத்திரத்தில் தனக்கு திருமணமாகியுள்ளதாகவும், மனைவி பெயர் ஜசோதாபென் எனவும் தெரிவித்துள்ளார். எனவே மோடி தனக்கு திருமணமாகியுள்ளது என கூறும் நிலையில் விஜய்ரூபானி இப்படி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.