புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கம்பன் கலையரங்கில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு சமூக சேவையாற்றிய பெண்கள், சாதனைகள் பல புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.
இந்த விழாவில் தலைமையுரையாற்றிய முதல்வர் ரங்கசாமி, "பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்த முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது, மேலும் நமது அமைச்சரவையில் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான்" என பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "நல்லதை செய்து நல்லவற்றை வரவேற்றால் அதுதான் மக்களாட்சியின் மிகப்பெரிய பலம் என்பதை நான் உணர்ந்து இருக்கின்றேன். தெலுங்கானாவில் ஏராளமான மகளிர் தின விழாக்களில் கலந்து கொண்டேன். அது பெரிய விஷயம் அல்ல. அதே நேரம் அந்த மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு சம உரிமை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் நிலையில் ஒரு பெண் ஆளுநரின் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த காலத்தில் ஒரு பக்கம் பெண் உரிமை பேசுகின்றோம், ஒரு பக்கம் மறுக்கப்படுகின்றது. பெண்கள் என்றால் எப்போதும் சுயகர்வத்தை பார்ப்பதை விட மக்கள் நலனைத்தான் பார்ப்பார்கள். அது வீட்டு நலமாக இருந்தாலும் சரி நாட்டு நலமாக இருந்தாலும் சரி. ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யலாம். ஆனால் ஆளுநரின் கையெழுத்து இல்லாமல் பட்ஜெட் நிறைவேறாது. ஆளுநர் என்ன செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்தனர், உரையாற்ற அனுமதிக்கப்படாததால் ஆளுநர் கையொப்பம் இட மறுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். இதை நான் அதிகாரமாக சொல்லவில்லை. அரசியலமைப்பு சட்டம் சொல்கின்றது. ஆனால் மக்கள் நலத்திட்டம் எந்த நிலையிலும் தடைப்படக்கூடாது என்று பட்ஜெட்டிற்கு கையொப்பம் போட்டு கொடுத்தேன். பெண்கள் நாட்டை ஆள முடியும் என்ற நிலை வந்துள்ளது. மேலும் பெண்கள் இன்னும் தங்கள் உரிமையை பெறவேண்டிய நிலையும் உள்ளது.
தொழில் துறையிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். அதற்கு பெண்கள் தொழில் துறைக்கு வர வேண்டும். ஒரு பெண் வெளியே வந்தால் ஆயிரம் ஆண்கள் வெளியில் வருவதற்கு சமம். அதை நான் உணர்ந்துள்ளேன். இன்றைக்கு இளம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தண்டணை அதிகரிகக வேண்டும். பெண்குழந்தைகளை பாதுகாப்பது சமூகத்தின் கடமை, ஆசிரியர்களின் கடமையாகும். இதை முழுவதுமாக கண்காணிக்கப்பட வேண்டும்" என கூறினார்.