ரூ.8.65 லட்சம் மின்கட்டணம் செலுத்தக்கோரி மின்வாரியம் வலியுறுத்திய நிலையில், அதிர்ச்சியடைந்த காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது பாரத்நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் நேஹாஜி ஷில்கே என்பவர் காய்கறி வியாபாரம் செய்துவந்துள்ளார். இவருக்கு கடந்த மாதத்திற்கான மின்கட்டணமாக ரூ.8,65,020 தொகையை அனுப்பிவைத்த அவுரங்காபாத் மின்வாரியம் மின்வாரியம், அந்தத் தொகையை வரும் மே 17ஆம் தேதிக்குள் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தத் தவறினால் அபராதத் தொகையோடு சேர்த்து ரூ.8,75,830 செலுத்தவேண்டும் எனவும் மின்வாரியம் எச்சரித்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த ஷில்கே இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த ஷில்கே தனது சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில், மின்வாரியம் தன்னிடம் அதிக அளவிலான மின்கட்டணம் கேட்டது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தனை பெரிய தொகையை தன்னால் செலுத்த முடியாது என்பதால் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் எனவும் அதில் உருக்கமாக எழுதியுள்ளார்.
உயிரிழந்த ஷில்கே மின்வாரியத்திடம் இதுகுறித்து முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காமல், லைன்மேனிடம் பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதே உயிரிழப்புக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷில்கேவின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்காமல் அவரது உடலை வாங்கமுடியாது எனக்கூறி அவரது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.