Skip to main content

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு அடித்தம் போடும் உ.பி. தேர்தல்? - நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

sharad pawar and akilesh yadhav

 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

 

இந்தநிலையில் நேற்று (09.08.2021) இரவு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டின் உமர் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன் மற்றும் கல்யாண் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட்டின் டி. ராஜா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், ஆர்எல்டியின் ஜெயந்த் சவுத்ரி, திமுகவின் திருச்சி சிவா, சிவசேனாவின் சஞ்சய் ராவத் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் வீட்டில் ஒன்று கூடினர். காங்கிரஸ் தலைமையின் மேல் அதிருப்தியில் உள்ள ஜி 23 தலைவர்களும், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரமும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. கபில் சிபலின் பிறந்தநாள் விருந்துக்காக இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூடியதாக கூறப்பட்டாலும், இந்தக் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து பேசப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகாலி தள கட்சியின் மூத்தத் தலைவர் குஜ்ரால், “காங்கிரஸ் கட்சி, காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து வெளியே வர வேண்டும்” என கூறியதாகவும், அதேநேரத்தில் பல தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என கூறியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசல்களை சரி செய்ய வேண்டும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

அதேபோல் பல தலைவர்கள், அனைவரும் உத்தரப் பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யதாவிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும், தேர்தலில் நமக்குள் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ப. சிதம்பரம், “காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளோடு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு பாஜகவிற்கு எதிராக அணியைக் கட்டமைக்க வேண்டும்” என கூறியதாகவும் கூறப்படுகிறது.

 

எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று நடத்திய ஆலோசனை, இனி வருங்காலங்களில் எதிரொலிக்கும் என கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்