உத்தரபிரதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய உணவில் சாதத்துடன் மஞ்சள் கலந்த தண்ணீர் வழங்கப்பட்டதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
![uttarpradesh student lunch video controversy](http://image.nakkheeran.in/cdn/farfuture/PVB0_d2OMlKA-FcxMM4YlbHA5WLWl9ACUAjrSBli8wA/1571139558/sites/default/files/inline-images/lunc.jpg)
உத்தரபிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தின் விச்பாரியா கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், சமீபத்தில் மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்கையில் சாதத்துடன் காய்கறிகள் எதுவும் கொடுக்காமல், வெறும் மஞ்சள் கலந்த நீரை அதனுடன் கலந்து கொடுத்ததாக வீடியோ ஒன்றை செய்தியாளர் ஒருவர் வெளியிட்டார். பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து அப்பள்ளிக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், மாணவர்களுக்கு சாதத்துடன் காய்கறியும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேண்டுமென்று யாரோ சிலர் வெறும் மஞ்சள் தண்ணீரை மாணவர்கள் தட்டில் ஊற்றி வீடியோ எடுத்துள்ளார் என கூறியுள்ளனர். ஏற்கனவே சப்பாத்திக்கு உப்பு தரப்படுவதாக கூறிய செய்தியாளர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது இந்த வீடியோவை பதிவு செய்த செய்தியாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.