அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும் அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மேலும் அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் எஃப்.பி.ஓ பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்தது. இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும், முதலீட்டாளர்களுக்கு விற்பனைத் தொகையைத் திரும்பச் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதானி நிறுவனத்தின் மீது ஹிண்டன்பெர்க் நிறுவனம் வைத்துள்ள குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இரு அவைகளும் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இதனிடையே அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரத்தை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு தற்போது 173 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், "பங்குச் சந்தை ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளரான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தரவுகளின் அடிப்படையில் அதானி குழுமத்தின் எந்த ஒரு நிறுவனமும் பங்கு விலை அதிகரிப்பு போன்ற முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பங்குகள் விலை திடீரென அதிகரித்ததை மட்டும் வைத்துக்கொண்டு முறைகேடுகள் நடந்ததா என்ற முடிவுக்கு வருவது சாத்தியமில்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டு அதானி குழுமத்தில் 13 வெளிநாட்டு முதலீடுகள் குறித்து செபிக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி உள்ளது. ஆனால், இதில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படவில்லை. அதே சமயம் அதானி குழுமம் இந்திய ஒழுங்குமுறை சட்டங்களுக்கு இணங்குவதாகவும் செபி தெரிவித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.