உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரைக் களமிறக்காததால் இரு கட்சிகளிடையே மறைமுகக் கூட்டணி உள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது உத்தரபிரதேச மாநிலம். கடந்த 1989- ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மீண்டும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் 6.25%- லிருந்து 5.4% ஆக குறைந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி புதிய நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. உத்தரபிரதேச பா.ஜ.க. மீதான எதிர்ப்பு மனநிலை விவசாயிகள் போராட்டம், பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தி மேற்கொள்ளும் பரப்புரை போன்றவற்றோடு, சிறுபான்மையினர், பட்டியலினத்தனர்களின் வாக்குகள் தங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறது காங்கிரஸ்.
அதே நேரம், பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுகமாக உதவி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த முறை பா.ஜ.க.வின் வெற்றிக்கு பங்கு வகித்த ஓபிசி பிரிவு தலைவர்கள், அண்மையில் பா.ஜ.க.வில் இருந்து சமஜ்வாதிக்கு தாவியதுப் போது கூட, காங்கிரஸ் கட்சி இதனை விமர்சிக்கவில்லை.
அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதியில், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களை வென்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்டதே தோல்விக்கு காரணம் என்றும், இந்த தேர்தலிலும் அந்த நிலை தொடர வேண்டாம் என்ற எண்ணத்தில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்றும் கருதப்படுகிறது.