மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ராகுல் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பல முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சத்யஜித் தேஷ்முக், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸில் இருந்து நேற்று ஊர்மிளா விலகிய நிலையில் இன்று சத்யஜித் தேஷ்முக் குறித்த செய்தி அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது விலகல் குறித்து சத்யஜித் ஏன்ஐயிடம் அளித்த பேட்டியில் கூறுகையில், ''நான் இப்போதைக்கு பாஜகவில் இணையப் போவதில்லை. ஆனால் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பேன். நான் காங்கிரஸிலிருந்து விலகுவதற்கான முக்கியமான காரணம், அங்கு ஏற்பட்டுள்ள அதிருப்திதான். காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு எனது ஆதரவாளர்களுக்காக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எதுவும் சாதிக்க முடியவில்லை. அதனால் அதற்கு ஏற்ற இடத்தைத் தேடி நான் செல்ல வேண்டியுள்ளது. காங்கிரஸில் இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை" என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய நபர்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.