நெருங்கிய உறவினர்களுக்கு சிறைக்கைதிகள் உறுப்புதானம் வழங்க கேரள அரசு அனுமதி!
சிறைதண்டனையில் இருக்கும் கைதிகள் தங்களது உறவினர்களுக்கு உறுப்புதானம் வழங்க கேரள அனுமதி வழங்கியுள்ளது.
சிறைதண்டனை அனுபவித்து வரும் கைதிகள், தண்டனைக் காலத்தில் சொந்த மருத்துவக் காரணங்களுக்காக வெளியில் செல்வதே மிகப்பெரிய சவாலான காரியம். பல்வேறு விதிமுறைகளைக் கடந்தே அவர்களுக்கான அனுமதியானது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநில சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் தங்களது நெருங்கிய உறவினர்களுக்கு உறுப்புதானம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதற்காக சம்மந்தப்பட்ட கைதி கேரள மருத்துவ வாரியம் மற்றும் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றத்திடம் ஒப்புதல் பெறவேண்டும்.
முன்னதாக, தமது நெருங்கிய உறவினருக்கு கைதி ஒருவரால் உடல்தானம் செய்ய முடியாமல் போனது. இதனால், பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். சிறை விதிமுறைகளில் இருக்கும் கெடுபிடிகளே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.