நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், முதற்கட்டமாக 170 முதல் 190 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.
அந்த பட்டியலில், 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் 24, மேற்கு வங்கத்தில் 20, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 15 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க அறிவித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 28 பெண்கள், 27 பட்டியலினத்தவர்கள், 18 பழங்குடியினர், 57 ஓ.பி.சி பிரிவினர்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முக்கியமாக 50 வயதுக்கு உட்பட்ட 47 பேருக்கு போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு அளித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார்.