இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தினசரி கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை ஒன்றை லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று (13.04.2021) ஒரேநாளில் ஒரு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், வருகின்ற மே மாதம், சி.பி.எஸ்.இயில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சி.பி.எஸ்.இ தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சி.பி.எஸ்.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.'
இந்நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன், சி.பி.எஸ்.இ தேர்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார் என இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.