சக மாணவர்களுக்கு முன்பு ஆசிரியர் கட்டி வைத்து அடித்ததால், 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா அருகே உள்ள குர்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் தனஞ்செய் திவாரி. இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் விதிமுறையை மீறி, இருக்கமான சட்டை மற்றும் பென்சில் ஃபிட் பேண்ட் அணிந்து வந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த வகுப்பாசிரியர் பூனம் அவரை தாக்கியுள்ளார். இதன்பின் தலைமை ஆசிரியை சரோஜ் ஷரமிடம் அழைத்து சென்றுள்ளார் வகுப்பாசிரியர். அங்கு வைத்து மாணவர் கைகளை, கழுத்தில் அணியும் டையின் மூலம் கட்டிவைத்து பிரம்மை எடுத்து தாக்கியுள்ளார். அப்போது தலைமை ஆசிரியையின் கணவர் பிரபு தத்தும் சேர்ந்து தாக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் தனஞ்செய் திவாரி, இதுகுறித்து வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் தனஞ்செய்.
மாணவரின் தந்தை ப்ரிஜ் ராஜ் திவாரி, போலீசில் புகார் தெரிவித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தியதுடன், தலைமை ஆசிரியையின் கணவர் உட்பட பலர், மாணவரின் கையை கட்டி வைத்து அடித்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, ஆசிரியர் பூனம், தலைமை ஆசிரியை ஷரோஜ் ஷரம், அவரது கணவர் பிரபு தத் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, பஞ்சாப் முதலமைச்சர் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும்படி லூதியானா காவல் ஆணையருக்கு தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் தனஞ்செய் திவாரி தற்கொலை எதிர்பாராதது என தெரிவித்துள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் விரைவில் கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.