பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம் என்று தெரிந்தே கூட்டணி வைத்தோம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில், பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதாக குற்றம்சாட்டி, கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பிடிபி கூட்டணி அரசின் ஆட்சி கலைந்தது. அதன் பிறகு ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு கட்சிகள் முயற்சி செய்தன. இதனால் சட்டப்பேரவையைக் கலைத்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில், மும்பையில், நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் அதில், 'ஜம்மு காஷ்மீரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தால், பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், உண்மையில், பாஜகவுடன் கூட்டணி சேர்வது என்பது தற்கொலைக்கு சமம் என்று தெரிந்தே தான் அந்த நடவடிக்கையில் இறங்கினேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஆட்சியில் இல்லாத பெரும்பான்மை பலம் மோடிக்கு இருப்பதால், பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம். மேலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் குறைகளை மோடி தீர்த்துவைப்பார் என்று நம்பினோம். ஆனால், இவை எதையும் மனதில் கொள்ளாமல், பிடிபி கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டார் மோடி. எதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்தோமோ அது நடக்காமல் மக்களும் நாங்களும் ஏமாற்றப்பட்டோம்' என கூறினார்.