அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது”எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த கருத்துக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதே சமயம், எலான் மஸ்க் கருத்து உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு கூடிய சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அதன் பின்னர், பெருவாரியான வாக்குகளைப் பெற்ற தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றி சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன் மோகன் ரெட்டி, எலான் மஸ்க் கூறிய கருத்துக்கு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன. அங்கு வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும்” எனக் கூறினார்.