உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.எல்.ஏ.வை இன்று அதிகாலை சி.பி.ஐ. கைது செய்தது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஜூன் மாதம், தனது கூட்டாளிகளோடு சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர். இவர்மீது காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்க மறுத்துவந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உபி முதல்வர் யோகி வீட்டின் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், அந்த சிறுமியின் தந்தையை வழக்கை வாபஸ் பெறும்படி துன்புறுத்திய எம்.எல்.ஏ. செங்கரின் தம்பி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ. செங்கரால் தனது மாமாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் எனவும் அந்த சிறுமி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் குல்தீப் சிங் செங்கரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். செங்கர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது லக்னோவில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் வைத்து செங்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.