இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்று வருகின்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில் மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சௌகான், நிர்மலா சீதாராமன், ஜெய்ஷங்கர், மனோகர் லால், குமாரசாமி, பியுஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன்ராம் மஞ்சி, வீரேந்திர குமார், ராஜீவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால், கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு, பிரகலாத் ஜோஷி ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிஃப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.