இமயமலைக்கும், இந்திய பெருங்கடலுக்கும் இடையே வாழும் அனைவரும் இந்துக்களே என மத்திய இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியிருப்பது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்து மதம் தொடர்பான கருத்தரங்கில் உணவு பொருள் மற்றும் பொது விநியோகத்துறைக்கான மத்திய இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்து என்பது பூகோள ரீதியான அடையாளம்; வாழ்வியல் முறைக்கான வழியையே இந்து மதம் போதிக்கிறது. இந்து என்ற வார்த்தையை சில எல்லைகளோடு சுருக்கிக் கொள்ளக் கூடாது. இமயமலைக்கும், இந்திய பெருங்கடலுக்கும் இடையே வாழும் அனைவரும் இந்துக்களே. தாய் போன்று கருதுவதாலேயே இந்திய திருநாட்டை பாரத மாதா என நாம் அழைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
ஹிந்தியே தேசியமொழி என சிலர் கூறும் கருத்தால் அவ்வப்போது சர்ச்சை எழும் நிலையில், இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்களே என மத்திய அமைச்சர் கூறியிருப்பது புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.