உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அச்சப்பட்டு பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என மத்திய அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆன்லைன் விற்பனையை ஃபிளிப்கார்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே விற்பனை என அமேசான் அறிவித்த நிலையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.