நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரியை மற்ற காட்சிகள் உதவியுடன் பிரதமர் ஆக்கும் முடிவில் பாஜக உள்ளதென தகவல் பரவியது. இந்நிலையில் இது குறித்து சேத்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, "எனக்கு என்று ஒதுக்கப்பட்ட பணியை நான் நிறைவேற்றி உள்ளேன். இந்திய நாட்டுக்கு என்னால் ஆன சிறந்தவற்றை செய்வதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். மேலும் பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை. நாடு தான் எனக்கு பெரியது. எனக்கு கனவுகள் இல்லை. நான் எதற்காகவும், யாரிடமும் போய் நிற்க மாட்டேன். ஆதரவு தேடவும் மாட்டேன். நான் போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்" என கூறினார். பிரதமர் பதவிக்கு மோடிக்கு பதிலாக நிதின் கட்கரி அறிவிக்கப்படலாம் என பரவிவந்த ஊகங்களுக்கு நிதின் கட்கரியின் இந்த பதில் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.