தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போல், மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் வருகிற நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சி வேட்பாளர்கள் முழு மூச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், திம்னி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், நரேந்திரசிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப்சிங் தோமர், பண பரிவர்த்தனை குறித்து சிலரிடம் பேசுவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ‘ராஜஸ்தானில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை பரிமாற்றம் செய்ய நான்கு, ஐந்து கணக்குகளை ஏற்பாடு செய்வது பற்றி தேவேந்திர பிரதாப் சிங்கிடம், அந்த நபர் பேசுவது போல்’ அந்த வீடியோவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் ஒன்று, நேற்று முன் தினம் (05-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி பேசியதாவது, “ஒரு அமைச்சரின் மகன் ரூ.100 கோடி ரூ.1000 கோடி என லஞ்சம் கேட்கும் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் மூலம் பா.ஜ.க ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதை நிரூபிக்கும் வகையில் உள்ளது” என்று பேசினார்.