Skip to main content

சொந்த கணக்கை பயன்படுத்த மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுத்த ட்விட்டர்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

ravi shanakar prasad

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிகளை அறிவித்தது.

 

இந்தப் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான அவகாசம் கடந்த மே 26ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டன.  ஆனால் ட்விட்டர் நிறுவனம், இந்த விதிகளை ஏற்கவில்லை. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியுள்ளது.

 

இந்தநிலையில் தனது சொந்த ட்விட்டர் கணக்கை பயன்படுத்த, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு ட்விட்டர் நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது. ரவி சங்கர் பிரசாத் பகிர்ந்த பதிவு ஒன்று காப்புரிமையை மீறுவதாக, அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமை சட்டத்தின் கீழ் புகார் வந்ததையடுத்து, ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமை சட்டத்தை மீறியதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், எனது கணக்கை அணுக ட்விட்டர் நிறுவனம் எனக்கு ஒரு மணிநேரம் அனுமதி மறுத்தது. அதன்பிறகு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது" என கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "முன் அறிவிப்பின்றி, எனது சொந்த கணக்கை அணுக ட்விட்டர் நிறுவனம் அனுமதி மறுத்தது, இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் 2021-னின் விதிகளை மீறுவது செயல்" எனவும் அவர் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்