Skip to main content

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது?; மத்திய அமைச்சர் தகவல்

Published on 18/11/2024 | Edited on 18/11/2024
 Union Minister Kiren Rijiju Information When is the One Country One Election Bill tabled?

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது தான் மத்திய பா.ஜ.க அரசின் கனவு திட்டம். அந்த திட்டத்தை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனை மீறியும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு, பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்டு 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்பித்தது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு அந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா, விரைவில் நாடாளுமன்றத்துல் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், வருகின்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் இடையூறு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தயாரிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாம் ஒரே தேசமாக இருப்பதால் இந்த அமைப்பு நமக்குத் தேவை. மேலும் ஒரே தேர்தல் செயல்முறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நவம்பர் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல்' போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்