ஆந்திரப் பிரதேச மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். குடியிருப்பு வீடுகளில் வசிக்கும் 18 மாணவிகள், இந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை நேர வழிப்பாடுக்கு தாமதமாக வந்துள்ளனர்.
இதில் கோபமடைந்த மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பொறுப்பு ஆசிரியர் சாய் பிரச்சன்னா, 18 மாணவிகளின் தலைமுடியை வெட்டியுள்ளார். மேலும் அவர், நான்கு மாணவர்களை தாக்கி, அவர்களை வெயிலில் நிற்க வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடம் கூற வேண்டாம் என்று சாய் பிரசன்னா, மாணவிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.