நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பீகார் மாநிலம் மதுபானியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “காஷ்மீர் நம்முடையதா இல்லையா?. ராஜஸ்தான் மற்றும் பீகார் மக்களுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார். கார்கே நீங்கள் 80 வயதை கடந்துள்ளீர்கள். ஆனால் உங்களால் இந்தியாவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ அகற்றக்கூடாது என்று ராகுல் கூறினார். பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு கூழாங்கல்லைக் கூட எறிய முடியாது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா பலமாக உள்ளது. எனவே எந்த அணுகுண்டுக்கும் பயப்படத் தேவையில்லை. மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பிரதமராக்குவேன் என்று உறுதியளிக்க விரும்புகிறேன்.
பசுவதை தொடர்பான வழக்குகள் இப்பகுதியில் இருந்து அதிக அளவில் வந்துள்ளன. இது சீதா அன்னையின் பூமி. இங்கு பசுக் கடத்தலையோ, படுகொலையையோ அனுமதிக்க மாட்டோம். பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம். நாட்டின் எல்லையில் தீபாவளியை நமது வீரர்களுடன் கொண்டாடுகிறோம். மகாபாரதத்தைப் போலவே இருபுறமும் தெளிவான முகாம்கள் உள்ளன. ஒன்று பாண்டவர்கள் மற்றும் மற்றொன்று கௌரவர்கள்” எனப் பேசினார்.