Skip to main content

“இந்தியாவில் குரங்கம்மை தொற்று உறுதி” - மத்திய சுகாதார அமைச்சகம்  தகவல்!

Published on 09/09/2024 | Edited on 09/09/2024
Union Health Ministry Information about Monkey pox confirmed in India 

குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக சுகாதார நிறுவனம், குரங்கு காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC - Public Health Emergency of International Concern) அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், ‘18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே பெரும்பாலும் குரங்கம்மை தாக்குகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஒருவருக்குக் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது குரங்கம்மை நோய் பரவும் நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவிற்குப் பயணம் செய்த ஒரு இளம் ஆண் நோயாளி, குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் குரங்கம்மை நோய் இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு கிளாட் 2 வகை தொற்று உறுதியாகியுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இது உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள வகைப்பாட்டைச் சேர்ந்தது இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்