இந்தியாவில் கரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அண்மையில் அறிவித்தார்.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்த, தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 15-18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த பிரத்தியேக மையங்களை அமைக்கலாம் எனவும் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைக்கு 15-18 வயதுடையவர்களுக்குக் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.