நாட்டில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது. அதன்படி மத்திய அரசும், எல்.ஐ.சியும் இணைந்து ரூபாய் 9,000 கோடியை ஐடிபிஐ வங்கிக்கு மறுமூலதன நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஐடிபிஐ வங்கிக்கு மறுமூலதன நிதி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது மத்திய அரசின் பங்காக ரூபாய் 4557 கோடியும், எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்காக ரூபாய் 4743 கோடியும் மொத்தம் ரூபாய் 9300 கோடி நிதியை ஐடிபிஐ வங்கிக்கு வழங்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, நிதி சுமையில் உள்ள வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் என குறிப்பிட்டிருந்தார். ஐடிபிஐ வங்கியை போன்று பல்வேறு வங்கிகளுக்கு மத்திய அரசு மறுமூலதன நிதி வழங்கவுள்ளது.