நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இதனையொட்டி பிரதமர் மோடி நேற்று (31.03.2024) எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது. மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது குறித்து காங்கிரஸ் 75 ஆண்டுகளாக உழைத்து எண்ணிக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த 1961 மே மாதத்தில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ‘இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதன் மீதான எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது போன்ற விஷயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும், மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை’ என்று ஒரு முறை பேசினார்.
இதில் இருந்து நேரு, இந்த குட்டித் தீவை ஒரு தொல்லையாகப் பார்த்தார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பார்வை இந்திரா காந்திக்கும் இருந்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் திடீரென தலைதூக்கவில்லை. பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை. அடிக்கடி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டும் காங்கிரஸும், தி.மு.க.வும் கச்சத்தீவு விவகாரத்தை எந்தப் பொறுப்பும் ஏற்காதது போல அணுகின.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அடிக்கடி கடிதப் பரிமாற்றம் நடந்து வருகிறது. தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சனைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பது தான் உண்மை” என்று கூறினார்.