
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
இதனையடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்படுமா என கேரள எம்.பி. சுதாகரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் கீழ் தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளதாகக் கூறிய ஒரு ஆவணம் லோக் சபா இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது.
மத்திய இணையமைச்சரின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், மீனாட்சி லேகி, எம்.பி. சுதாகரனின் கேள்விக்கு நான் எந்த விதமான பதிலும் கொடுக்கவில்லை; இது தொடர்பாக நான் எந்த கடித்ததிலும் கையெழுத்திடவில்லை என்று தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் பிரதமர் அலுவலகத்தையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கரையும் டேக் செய்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரின் ஒப்புதல் இன்றி எப்படி பதில் வெளியாகியுள்ளது? அப்படி அவர் பதில் அளிக்கவில்லை என்றால் அது லோக் சபா இணையதளத்தில் யார் பதிவேற்றம் செய்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.