ஆந்திரா மாநிலத்தின் மேற்கு கோதாவரி பகுதியில் அமைந்துள்ளது எள்ளுரு மாவட்டம். இம்மாவட்டத்திலுள்ள மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மர்ம நோயால், இதுவரை 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாயில் நூரை தள்ளுவதோடு மயக்கமடைந்து விடுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த மர்மநோய் எதனால் ஏற்பட்டது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமட்டல், வலிப்பு மற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களில் சிலர் திடீர், திடீரென ஒலி எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரோடு விவாதித்துள்ளார். எள்ளுரு மாவட்டத்தில், வீடு வீடாக ஆய்வு செய்ய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஜெகன் மோகன், எள்ளுரு மாவட்ட மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.