Skip to main content

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

சார்ந்த செய்திகள்