Skip to main content

வெளியே வந்தது பூனை... பறிபோன வேலை வாய்ப்பு... மறைக்க முயன்ற அரசு...!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

 

ஊ

 

இந்தியாவின் வேலையின்மை கடந்த 45 வருடங்கள் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளிவிவர ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை எடுக்கப்பட்ட வேலையின்மை பற்றிய புள்ளிவிவரத்தில் இது தெரியவந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளது என்றும் மேலும் இந்தியாவின் வேலையின்மை 6.1%-ஆக இருக்கிறது என்றும் அந்த ஆய்வுத் தெரிவித்துள்ளது. 

 

இந்த அளவு அதிகமான வேலையின்மை கடந்த 1972-73 ஆண்டுகளில் இருந்தது. அதன்பின் 45 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்த அளவு வேலையின்மை உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-12 ஆண்டின் வேலையின்மை 2.2%-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த வேலையின்மை புள்ளிவிவரத்தில் மற்றொரு முக்கிய தகவலும் தெரியவந்துள்ளது. மொத்த வேலையின்மை 6.1%. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது 15 முதல் 29 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே. 

 

இதில் கிராமப்புற இளைஞர்களில் ஆண்களின் வேலையின்மை 17.4%-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2011-12-ம் ஆண்டில் 5%-ஆக இருந்தது. அதேபோல் கிராமப்புற பெண்களின் வேலையின்மை 13.6%-ஆக உயர்ந்துள்ளது. இது 2011-12-ம் ஆண்டில் 4.8%-ஆக இருந்தது என அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும் நகர்ப்புறங்களில் இந்த வேலையின்மை ஆண்களுக்கு 18.7% எனவும், பெண்களுக்கு 27.2% எனவும் 2017-18 ஆண்டில் உயர்ந்துள்ளது. 

 

வேலையின்மையில் அதிகமாக இருப்பது படித்த இளைஞர்களாகவே உள்ளனர். கிராமப்புற பட்டதாரி பெண்களின் வேலையின்மை 2017-18-ல் 17.3%-ஆக உள்ளது. இது 2004-05-ல் 9.7%-ஆகவும், 2011-12-ல் 15.2%ஆகவும் இருந்தது என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும் கிராமப்புற பட்டதாரி ஆண்களின் வேலையின்மை, 10.5%-ஆக 2017-18 ஆண்டில் உயர்ந்துள்ளது. இது 2004-05-ல் 3.5% எனவும், 2011-12-ல் 4.4% எனவும் இருந்தது என முடிவுகள் தெரிவிக்கிறது.

 

இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த மாதமே தயாரிக்கப்பட்டும் இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவில்லை என்று, கடந்த 29-ம் தேதி தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் தலைவரான பி.சி.மோகனன் மற்றும் ஆணையத்தின் மற்றொரு உருப்பினர் மீனாட்சி ஆகிய இருவரும் பதவி விலகியுள்ளனர். 

 

‘ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம்’ என்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்ததும், இந்த ஆய்வு முடிவுகளும் மற்றும் தயாரிக்கப்பட்டும் வெளியிடாமல் தாமதிப்பதும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு மறைக்க முயற்சித்திருக்குமோ எனும் சந்தேகத்தை எழுப்புகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நடத்திய முதல் வேலையின்மை தொடர்பான ஆய்வு இது என்பது கவனிக்கவேண்டியது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்