ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று (24.02.2022) காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனின் நகரங்கள் மீது கடும் தாக்குதலை நிகழ்தி வருகிறது.
மேலும் உக்ரைனுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைய தொடங்கியுள்ளனர். உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டு இராணுவம் தனது பணியை செய்து வருவதாகவும், மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்ய படையெடுப்பிலிருந்து உக்ரைன் தன்னை தற்காத்துக்கொண்டு வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், உலக நாடுகள் புதினை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலில் அதி-துல்லிய ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் இராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு வசதிகள், இராணுவத்தின் விமானநிலையங்கள் ஆகியவற்றின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படுவதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவிற்கான உக்ரைன் தூதர், போரை நிறுத்த உதவுமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, “இந்தியா ரஷ்யாவுடன் தனித்துவமான உறவை கொண்டுள்ளது. தற்போதைய சூழலை கட்டுப்படுத்துவதில் டெல்லியால் இன்னும் அதிகமாக பங்களிக்க முடியும். அதிபர் புதினையும், எங்களது அதிபர் ஜெலென்ஸ்கியையும் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் மோடியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உக்ரைன், தாங்கள் ஐந்து ரஷ்ய விமானங்களையும், ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.