ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விளக்கமளித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 127 பேர் போலி ஆவணங்களை கொடுத்து ஆதார் பெற்றதாக மாநில போலீசார் கண்டுபிடித்த நிலையில், இதுகுறித்து தனித்துவ அடையாள ஆணைய அதிகாரியிடம் போலீசார் புகார் அளித்தனர். இவர்கள் அனைவருமே சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என விசாரணையில் தெரிய வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 127 பேரும் விசாரணைக்கு நேரில் வருமாறு ஆணைய அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார் எண் கொடுத்த பிறகு, அதுபற்றி விசாரணை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு விளக்கமளித்துள்ள UIDAI, "ஆதாருக்கும், குடியுரிமை விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் அளிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் ஆதாருக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 182 நாட்களாவது இந்தியாவில் வசித்துள்ளாரா என்பதை உறுதி செய்வது ஆதார் சட்டப்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பணி ஆகும். போலி ஆவணங்களை கொடுத்து ஆதார் பெற்றதாக வந்த புகாரின்பேரில், 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 127 பேரும் அளிக்கும் பதில்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அவர்களது ஆதார் எண் ரத்து செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.