கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதித் தேர்வுகளை எழுதாமல் யாரும் பட்டம் வாங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மையங்கள் போன்றவை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், செப்டம்பர் இறுதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இறுதித் தேர்வுகளை எழுதாமல் யாரும் பட்டம் வாங்க முடியாது என யுஜிசி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மாநில அரசுக்கு முடிவெடுக்க முடியாது எனவும், மகாராஷ்ட்ரா மற்றும் டெல்லி மாநில அரசுகளின் கல்லூரி தேர்வு ரத்து அறிவிப்புகள் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.