புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழா ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் அறுபது ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியை புதுவை மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. 1673 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு மாஹியையும், ஏனாமையும், காரைக்காலையும், சந்திரனாகூரையும் அடுத்தடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு கோணங்களில் விடுதலைப் போராட்டங்கள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கியதால் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அளித்தனர். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.
புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து விட்டதால் இந்தியாவின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுநாள் 16-ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் பல அறுபது ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தினர், தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக, நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பயனாக நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவித்து சுதந்திரத்தை கொண்டாடி வருகின்றனர். வருடா வருடம் புதுச்சேரி விடுதலை தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை நவ.1 மற்றும் 2 தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .