ட்விட்டர் நேரலையின்போது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரை சீனாவின் எல்லைக்குட்பட்ட பகுதி என காட்டிய சர்ச்சையில், மத்திய அரசு அமைத்த நாடாளுமன்ற விசாரணை குழுவிடம் அந்நிறுவனம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து கடந்த மாத மத்தியில் ட்விட்டரில் நேரலை செய்யப்பட்ட ஒரு வீடியோவில் தவறான ஜியோடேக் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் தோன்றிய ட்விட்டர் ஜியோடேக்கின்படி ஜம்மு, காஷ்மீரின் லே பகுதி சீனாவின் பகுதியாகக் காட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்ற நிலையில், இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற சிறப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு.
இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்க, 'தனிப்பட்ட தரவு பாதுகாப்பு' குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழுவின் முன், ஆஜரான ட்விட்டர் அதிகாரிகள் வாய்மொழி மன்னிப்பு கோரினர். ஆனால், இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நாடாளுமன்றக் குழு, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரவும், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தவறுக்காக இன்று இந்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது ட்விட்டர் நிறுவனம். நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளதுடன், இந்த தவறினை இம்மாத இறுதிக்குள் சரிசெய்து விடுவதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.