உத்தரப்பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அரசு அதிகாரியின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கௌஷம்பி பகுதிக்கு அருகே உள்ளது மஞ்சான்பூர் கிராமம். இந்த பகுதியில் மாவட்ட நன்னடத்தை அலுவலராக இருக்கிறார் ராம்நாத் ராம். இவர், பணியாற்றும் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மாவட்ட நன்னடத்தை அலுவலர் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெண் இந்த விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். அப்படி ஒருநாள், அலுவலகத்தில் தனியாக இருந்த அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை ராம்நாத் ராம் எல்லை மீறி துன்புறுத்தியுள்ளார். மேலும், இங்கு நடப்பதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சமாஜ்வாடி கட்சியின் ஐடி பிரிவைச் சேர்ந்தவர்கள் இதனைத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “இந்த மாநிலத்தில் என்னதான் நடக்கிறது. யோகி ஆதித்யநாத் ஆட்சியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட பாதுகாப்பில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பாதுகாப்பு அளிப்பதே பாஜக கட்சியினர்தான்” எனப் பதிவிட்டிருந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் வெளியில் கசிந்தவுடன் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக சொல்ல முடியாது. கடந்த 3 ஆண்டுகளாக அவர் என்னை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி வந்தார். மேலும், இந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பெண் ஊழியர்களுக்கும் இதே கதிதான். அந்த அரசு அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.