நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த துயர நிகழ்வு நாட்டையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிற இராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் உலக நாடுகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே 12 மாநிலங்களை எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள், பிபின் ராவத் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று போராட்டம் நடத்த போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இன்று நாடாளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்களவையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது; இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்படும். விசாரணைக் குழு நேற்றே வெலிங்டனுக்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகள் முழு இராணுவ மரியாதையுடன் நடைபெறும். மற்ற ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகள் உரிய இராணுவ மரியாதையுடன் செய்யப்படும். குரூப் கேப்டன் வருண் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.