
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனா. இவருக்குத் திருமணமாகி சுமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சிருஷ்டி (13) என்ற மகள் இருந்தார். சிருஷ்டி, தரடஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது பள்ளிக்குத் தினமும் நடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சிருஷ்டி நேற்று (20-12-23) காலை வழக்கம்போல் தனது பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சிருஷ்டிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சிறுமியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை, மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாரடைப்பால் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.