மத்திய திட்டக்குழுவிற்கு மாற்றாக, கடந்த 2015 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது நிதி ஆயோக். தற்போது இதன் தலைமைச் செயல் அதிகாரியாக அமிதாப் கண்ட் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், அமிதாப் கண்ட், தனியார் பத்திரிகை இணையம் நடத்திய 'ஆத்மநிர்பார் பாரதத்திற்கான பாதை' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவில் அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதால், கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்வது, கடினமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். முதல்முறையாக இந்திய அரசு, பல்வேறு துறைகளில் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள, தைரியத்துடனும், முனைப்புடனும் இருப்பதாகவும் அமிதாப் கண்ட் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப் கண்ட், அந்த நிகழ்ச்சியில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அவர், விவசாயத்துறை சீர்திருத்தம் பெற வேண்டும். விவசாய மண்டிகளும், குறைந்தப்பட்ச ஆதாரவிலையும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதிய சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகளுக்கு, தங்கள் பயிர்களை விற்க ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறியுள்ள அமிதாப் கண்ட், குறைந்தபட்ச ஆதார விலையை விட, ஒருவர் அதிகமாகத் தரும்போது, அதை ஏன் விவசாயிகள் பெறக்கூடாது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.