கற்பழிப்பு சாமியாருக்கு நாளை தண்டனை அறிவிப்பு:
ஆசிரமம் முற்றுகை!
ஹரியானாவில் கற்பழிப்புப் புகாரில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு திங்கள்கிழமை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. நீதிபதி சிறைக்கே சென்று தண்டனையை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
டேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஹரியானாவில் சாமியாரின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை தடுக்க அந்த மாநில பாஜக அரசின் முதல்வர் கட்டார் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக சாமியாருக்கு ஆதரவாக கட்டார் செயல்படுவதாக அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில், சாமியாரின் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக சாமியாரின் சொத்துக்களை முடக்கி, அதிலிருந்து ஈடுகட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதையடுத்து சாமியாரின் சிர்ஸா ஆசிரமத்தை ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. ஆசிரமத்துக்குள் 30 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அவர்களை அப்புறப்படுத்துவதில் ராணுவம் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.