வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 52வது நாளாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எட்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும். இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. இந்த நிலையில் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையிலும், விவசாயிகளின் கோரிக்கைகள் முழுதாக ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாயச் சங்கங்களுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை. ஜனவரி 19 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். பேச்சுவார்த்தை மூலம் சரியான தீர்வை எட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கடும் குளிரில் விவசாயிகள் போராடுவது குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு மத்திய அரசின் கருத்துக்களைக் கேட்டால், அவர்கள் முன் அரசாங்க தரப்பில் பிரதிநிதிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.